சென்னையில் தந்தையை மகன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் சென்னை 7 கிணறு வைத்தியநாதன் தெருவில் வசித்து வந்தார். கடைகளுக்கு மொத்தமாக இனிப்பு வகைகளை தயார் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவரது மகன் ரோகித்தும் தந்தையுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெகதீஷ் அடிக்கடி ரோகித்தை வேலை செய்ய சொல்லி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரோகித் இனிப்புகள் தயார் செய்யும் இடத்தில் இருந்த இரும்பு ராடை எடுத்து ஜெகதீஷின் தலையில் தாக்கி கொலை செய்தார்.
தொடர்ந்து அதனை வீடியோ எடுத்து தனது உறவினர்களுக்கு அனுப்பிய ரோகித் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் தப்பிச் செல்ல முயன்றார்.
இனிப்பு கிடங்கில் இருந்த மற்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கே சென்ற போலீசார் ரோகித்தை கைது செய்தனர்.