கோவில்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த ஹரி பாலகிருஷ்ணன்-சாந்தி தம்பதியினர் தனது மகளின் திருமணத்திற்காக 2021ஆம் ஆண்டு லிங்கம் என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு வரை வட்டி கட்டி வந்த நிலையில், ஓராண்டாக வட்டி கொடுக்காததால் இருதரப்பு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் 3 தவணைகளாக பணத்தை திருப்பி தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், பிப்ரவரி மாதம் தருவதாக கூறிய பணத்தை திருப்பி தராததால் லிங்கம் மற்றும் அவரது உறவினர்கள், ஹரி பாலகிருஷ்ணன் – சாந்தி தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஹரி பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக லிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.