இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தொடர்ந்து 5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
மீனவர்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 28ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம், திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டங்களை நடத்திய மீனவர்கள், தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
இதனிடையே, 3 கோரிக்கைகளை நிறைவேற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், , அடுத்தகட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.