ஜமைக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை இளைஞரின் உடல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது.
ஜமைக்காவின் பிராவிடன்ஸ் தீவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தபோது, விக்னேஷ் மற்றும் சக ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து விக்னேஷின் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட பாஜகவினர் மூலம் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அண்ணாமலையின் முயற்சியால் மத்திய அரசின் முழு பண உதவியோடு விக்னேஷின் உடல் விமானத்தின் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து விக்னேஷின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மீனாட்சிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து இளைஞர் விக்னேஷின் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாலாஜி நயினார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து விக்னேஷின் உடல் சிந்து பூந்துறையில் தகனம் செய்யப்பட்டது.