சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கடைகளை முறையாக ஏலம் விட பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலக வாயிலில் 14 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கடைகளை முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்போவதாக தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவினர், கடைகளை முறையாக ஏலம் விட்டு வழங்க வேண்டும் எனக்கோரி நகராட்சி மேலாளரிடம் மனு அளித்தனர். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு புதிய கடைகள் வழங்கப்படும் என கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர், முறையாக கடைகளை ஏலம் விடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.