சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 61 ரன்களும் எடுத்தனர். இந்திய வீரர் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 28 ரன்களிலும், சுப்மன் கில் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இருந்தபோதும், பொறுப்புடன் விளையாடி விராட் கோலி 84 ரன்கள் குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் 48.1 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.
மேலும், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐசிசியின் அனைத்து வகையான தொடர்களிலும், இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை ரோஹித் சர்மா அழைத்து சென்றார்.
மேலும், கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதையடுத்து, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் திரண்ட இந்திய ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தேசியக்கொடியே ஏந்தியபடி இந்திய அணிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பெண்கள் உள்ளிட்ட பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டின் முன்பு பட்டாசுகள் வெடித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கில் குவிந்த இந்திய அணி ரசிகர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தேசியக்கொடியை ஏந்திபடிய நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் ஆடிப்பாடி இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். அரையிறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.