சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த வழக்கு மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், அமைச்சர் பொன்முடி, கெளதம சிகாமணி, அசோக் சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கெளதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச் 19ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி எழில் வேலவன் தள்ளி வைத்தார்.