கோயில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றும் சினிமா பாடல்களை பாடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின்போது வளாகத்திற்குள் இசைக் கச்சேரி நடத்தப்பட்டதாகவும்,
அதில், பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும், ஆகையால் கோயிலுக்கு அறங்காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான இந்து அறநிலையத்துறை தரப்பு கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்றும், அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசின் கருத்தை அறிய அவகாசம் வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, கோயிலுக்குள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும் என்றும், பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.