வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் தொடங்கும் என பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பாலை விவசாயிகள் வழங்கி வருகின்றனர். அந்த பாலுக்கு அரசு வழங்கும் 3 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பாலுக்குரிய தொகை முழுவதும் கிராம சங்கங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு பின்னர் உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முலம் ஊக்கத்தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க ஆவின் முடிவெடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஆவின் பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காத்திருந்தனர்.
ஆனால் அவர் வராததால், திட்டமிட்டபடி வரும் 11-ஆம் தேதி முதல், ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.