அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துணை ஆட்சியராக பணியாற்றியவரை பணி ஓய்வு பெறும் நாளில் காரணமின்றி இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல, நெல்லையைச் சேர்ந்த தனிநபரும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு விளக்கத்தை அளிக்க தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் ஆஜரானார்.
வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
கல்வித்துறையில் அதிகமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது தேவையற்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.