எட்டயபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தாய் சீதாலட்சுமி, மகள் ராமஜெயந்தி ஆகியோரை கொலை செய்த மர்ம கும்பல் வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது. கடந்த 3ஆம் தேதி நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முனிஸ்வரன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது, முனீஸ்வரன் கையில் இருந்த அரிவாளால் போலீசாரை தாக்கி தப்பியோட முயற்சித்துள்ளார்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டடிப்பட்டு முனீஸ்வரன் சுருண்டு விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் முனீஸ்வரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் காயமடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவல் உதவியாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாக்சனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சம்பவம் குறித்து கேட்டறிந்த எஸ்பி, காவலர்களின் துணிச்சலான சம்பவத்திற்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் உடன் இருந்தார்.