திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல் மற்றும் எழுப்புதல் என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கன்னிமாரம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் சாய்தல் பின்னர் எழுப்புதல் என்ற நிகழ்வு குளக்கரை கருப்பசாமி கோயிலின் முன்பாக நடத்தப்பட்டது.
அதன்படி பக்தர்கள் பலரும் மயங்கி விழ, அவர்களை விழாக்குழுவினர் மைதானத்தில் படுக்க வைத்தனர். உடலில் எவ்வித அசைவுகளும் இன்றி பக்தர்கள் சில நிமிடங்கள் மயங்கியபடி தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர்.
இறுதியாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் சிறுமி ஒருவரை அழைத்து மயங்கியபடி இருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்க செய்தனர்.
அதன்பின் அருள் ஆடியபடி பக்தர்கள் ஆவேசமாக எழுந்தனர். இந்நிகழ்வை காண கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.