அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதிக்கு வசூல் பணிக்காக சென்ற சிவா காணாமல் போனார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கோடாலி கிராமத்தில் செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சடலத்தை மீட்டு போலீசார் ஆய்வு செய்தபோது, அது காணாமல்போன சிவா என தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கட்டாமல் இருந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மகேஷின் உறவினரான ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொருவரை தேடி வருகின்றனர்.