சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் அனுமதி வழங்கினர்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நகரில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அங்கு தொண்டர்களுடன் வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, தமிழிசையை சுற்றி வளைத்த போலீசார், நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறையிடம் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை போலீசார் கலவரமாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது தமிழிசைக்கு ஆதரவாக, “பாமர மக்களுக்கு சம கல்வி வேண்டும்” என பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.
அதன்பிறகு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழிசை சௌந்தரராஜனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சுற்றிவளைத்து அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 3 மணி நேரம் கழித்து கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். உடனே அங்கிருந்த மக்கள், தாமாக முன்வந்து கையெழுத்திட்டனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு திமுக அச்சமடைந்திருப்பதாக தெரிவித்தார். 3 மணி நேரத்திற்கு பின்னர் கையெழுத்து வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழிசை, பொதுமக்களை சந்திப்பதற்கு தடை விதிக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் தமிழிசையை தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழை வியாபாரமாக்கி தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவின் நாடகத்தை பொதுமக்கள் உணர தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவளிப்பதை கண்டு பயத்தில் முதலமைச்சர் நிலை தடுமாறுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
இதேபோல, தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.