திருப்பத்தூர் மாவட்டம், வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகளை உரிய வசதியின்றி தரையில் அமர வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெலக்கல்நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளை பரிசோதனை செய்யும் மருத்துவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வருவதால் ஜெயபுரம், சந்திரபுரம், மல்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.
கர்ப்பிணிகள் அமருவதற்கு கூட முறையான இடவசதி இல்லாததால் தரையில் கும்பலாக அமரும் நிலை ஏற்பட்டது. இதே போல் புறநோயாளிகளும் மருத்துவர்களை பார்க்க முடியாததால் அவதி அடைகின்றனர்.
எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.