லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு லண்டனில் நடைபெற்ற சாத்தம் ஹவுஸ் என்ற சர்வதேச விவகாரங்களுக்கான சிந்தனையாளர்கள் அமைப்பின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அங்கிருந்து தனது காரில் ஏறி புறப்பட முயன்றபோது, வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் அவரது காரை நோக்கி பாய்ந்தார்.
மத்திய அமைச்சரை தாக்க முயன்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த நபர் தனது கையில் வைத்திருந்த இந்திய கொடியை சேதப்படுத்தினார். அதன் பின்னர் அவரை போலீசார் அப்புறப்படுத்தியபோதும், அவர் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தூதரக பொறுப்புகளை பிரிட்டன் அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜனநாயக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.