சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழந்ததால் மன நலம் பாதிக்கப்பட்டு காரைக்காலில் சுற்றித் திரிந்த நபர் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் நகரில் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் திரிந்து யாசகம் பெற்று வந்துள்ளார். சரியாக உணவு உண்ணாததால் சுய நினைவு இல்லாமல் இருந்த அவரை அங்கிருந்த இளைஞர்கள் மீட்டு தலைமுடி வெட்டிவிட்டு உணவு உடை கொடுத்தனர். தொடர்ந்து அவரை காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஆய்வாளர் புருஷோத்தமன் அந்த நபரை நகர மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் வைத்திருந்த ஆதார் கார்டு மூலம் அழகுமலை கண்ணன் என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் மனைவி, இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்த நிலையில் அவரது மனைவியை வரவழைத்து அழகுமலை கண்ணனை ஒப்படைத்தனர்.
அவர்களின் செலவுக்கு பணம் கொடுத்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் பிள்ளைகள் படிப்புக்கு உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.