இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் போர் மூண்டது.
அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையின் முயற்சியால் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் இரு தரப்பினரிடையே முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஹமாஸ் தரப்பில் 8 பேரின் உடல்களுடன் 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் தரப்பில் 2 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 24 பிணைக் கைதிகளும், 34 பிணை கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கத்தார் தலைநகர் தாஹோவில் அமெரிக்கா சார்பாக ஹமாஸ் அமைப்புடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிணைக்கைதிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹமாஸ், தற்போது பாதி பிணை கைதிகளையும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பின் மற்றவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் அரசு காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிணை கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை என்றால், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் எனவும், இந்த தவறுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.