சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சனையில் அரசு ஐடிஐ மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் சில மாணவர்களை மூளைச்சலவை செய்த கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர்.
அதில் ஒரு மாணவர் கஞ்சாவை விற்காமலும், மற்றொரு மாணவர் கஞ்சா விற்ற பணத்தை கொடுக்காமலும் இருந்தது கஞ்சா வியாபாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த இரு மாணவர்களையும் ஓமக்குளம் பகுதியில் உள்ள விடுதி அறைக்கு வரவழைத்த கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் ஏன் கஞ்சாவை விற்கவில்லை எனவும், விற்ற கஞ்சாவிற்கான பணத்தை ஏன் கொடுக்கவில்லை என்றும் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில், கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி உடப்பு சிவா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவர்களை தாக்கிய வினோத் குமார் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாக்கப்பட்டதை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட விமல்ராஜ் என்பவனை அண்ணாமலை நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.