ஏற்காடு மலைப்பாதையில் காதலனால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளம் பெண் தொடர்பான வழக்கின் பின்னணியில் லவ் ஜிஹாத் இருப்பது அம்பலமாகி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் தலை தூக்கி வரும் லவ் ஜிஹாத் விவகாரத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இந்தியாவில் ‘லவ் ஜிஹாத்’ அச்சுறுத்தல் பரவலாக உள்ளது. நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் இது நடப்பதாக தினமும் கேள்விப்படுகிறோம். ‘லவ் ஜிஹாத்’ ஒரு பிரச்சினை இல்லை என்றும், அது ஒரு காதல் உரிமை என்ற மாயை கருத்து பரவலாக பரப்பப்படுகிறது.
‘லவ் ஜிஹாத்’ என்ற சொற்றொடர், 2009 ஆம் ஆண்டு, கேரளாவில் உள்ள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சிலில் உருவாக்கப்பட்டது. ஒரு பிஷப், ஏராளமான கத்தோலிக்கப் பெண்களை முஸ்லிம் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ள தூண்டுவதாக கூறியதால் லவ் ஜிஹாத் என்ற சொல் பிரபலமானது.
தங்கள் மகள்கள் கடத்தப்பட்டு, முஸ்லிம் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக, சிறுமிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து, கேரள மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களில் இரண்டு லவ் ஜிஹாத் வழக்குகள் தொடரப்பட்டதால், அந்த வழக்குகள் ஒவ்வொன்றும் பிரபலமடைந்தன.
இந்நிலையில், சேலத்தில் லவ் ஜிஹாத் வகையில் ஒரு கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ ஊசி போட்டு இளம் பெண் கொலை செய்யப்பட்டு, ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப் பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில், இன்ஜினியரிங் மாணவர், 2 காதலிகளுடன் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட இளம்பெண் 31 வயதான லோகநாயகி, திருச்சி, துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த முதுகலை பட்டதாரி.
இவருக்கும், பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரை சேர்ந்த இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வரும் 22 வயதான அப்துல் ஹபீஸுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 4 ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்காக, இஸ்லாம் மதத்துக்கு மாறிய லோகநாயகி, தன் பெயரையும் அல்பியா என மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில்,அல்பியாவை கடந்த சில நாட்களாக காணவில்லை. விடுதி வார்டன் கொடுத்த புகாரில் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மாயமான அல்பியா செல்போனுக்கு, திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் அழைப்பு பலமுறை பதிவாகி இருந்ததும் அல்பியாவின் செல்போன் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரியவந்தது. இதனையடுத்து அல்பியாவுடன் பேசிய திருச்சி இளைஞரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், சேலத்தில், தனியார் விடுதியில் தங்கியிருந்து, லோகநாயகி, ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். லோகநாயகியின் காதலன் அப்துல் ஹபீஸும் விடுமுறை நாட்களில் சேலம் வந்து அல்பியாவை சந்தித்து செல்வதை பழக்கமாக வைத்திருக்கிறார்.
இதற்கிடையே, சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயதான வரும் காவியா சுல்தானா என்ற பெண்ணுடன் அப்துல் ஹபீஸுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தன்னை காதலிக்கும் போதே, தன் காதலன் இன்னொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதை எந்த பெண்ணாலும் ஏற்று கொள்ள முடியாது. முழுமையாக நம்பி வந்த தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற அச்சம் அல்பியாவுக்கு வந்தது.
ஒருகட்டத்தில், திருமணத்துக்கு அப்துல் ஹபீஸை அல்பியா,கட்டாயப்படுத்தியிருக்கிறார். மேலும் தன்னைத் தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால், காதலனையும் அவன் குடும்பத்தினரையும் கொல்லாமல் விட போவதில்லை எனவும் அல்பியா மிரட்டி இருக்கிறார்.
அல்பியாவின் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அப்துல் ஹபீஸ், தனது புது காதலி காவியா சுல்தானா உடன் சேர்ந்து அல்பியாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்த கொலை திட்டம் குறித்து, தனது முதல் காதலியான 22 வயதான மோனிஷாவிடம் அப்துல் ஹபீஸ் ஆலோசனை செய்துள்ளான் . மோனிஷா விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து வருகிறார்.
தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்து அல்பியா கொலை செய்து விட்டதாகவும், ஒரு கட்டுக்கதையை, தனது முதல் காதலி மோனிஷாவிடம் அப்துல் ஹபீஸ் கூறியுள்ளான்.
இதற்காக, அல்பியாவை பழி வாங்க வேண்டும் என்றும், அதற்கு உதவ வேண்டும் என்றும் மோனிஷாவை மூளை சலவை செய்து கொலைக்கு உடந்தையாக இருக்கும் படி சம்மதிக்க வைத்துள்ளான் அப்துல் ஹபீஸ்.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி, அப்துல் ஹபீஸ், மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய மூவரும் ஒரே பைக்கில் சேலத்துக்கு வந்துள்ளனர். டிரைவர் இல்லாமல் காரை மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர்.
அல்பியாவிடம் தனது காதலிகளைத் தனது தோழிகள் என அறிமுகம் செய்துவைத்த அப்துல்ஹபீஸ் பின்னர், ஏற்காடு சுற்றுலா என அல்பியாவையும் அழைத்துச் சென்றுள்ளார்.
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே வந்தவுடன், காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர். விஷ ஊசியை இரண்டு முறை மோனிஷா அல்பியா உடலில் செலுத்தியுள்ளார்.
இப்படி, திட்டமிட்டு கொலை செய்தபின்,அல்பியாவின் உடலை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு மூவரும் காரில் தப்பி சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அப்துல் ஹபீஸ் வாக்குமூலத்தின்படி, பள்ளப்பட்டி மற்றும் ஏற்காடு காவல்துறையினர், 20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த அல்பியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அல்பியாவை கொலை செய்த அப்துல்ஹபீஸ், மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி, பெரம்பலூர், சென்னை, சேலம் என பல ஊர்களில் இளம் பெண்களைக் காதலித்த அப்துல், அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்திருக்கிறான் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்துலின் லவ் ஜிஹாத் வலையில் சிக்கிய பல பெண்களின் பட்டியலைத் தயார் செய்துள்ள காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.