மயிலாடுதுறையில் வயதான தம்பதியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பொறியியல் பட்டதாரி, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டது.
மயிலாடுதுறையில் டெலிகாம் நகரில் சேது மாதவன் – நிர்மலா தம்பதியர் வசித்து வருகின்றனர் . சேது மாதவன் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியராகவும், நிர்மலா அரசு பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
வயதான தம்பதியான இவர்களுக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த மூதாட்டி நிர்மலாவை, ராஜேந்திரனின் மகனும் பொறியியல் பட்டதாரியுமான பிரேம் கத்தியால் 15 இடங்களில் குத்தியுள்ளார்.
அவரை தடுக்க வந்த கணவர் சேது மாதவனுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார், பிரேமை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் செயல்முறை விளக்கத்திற்காக அவரை சம்பவ இடம் அழைத்துச் சென்றபோது பிரேம் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று வழுக்கி விழுந்தார்.
இதில் வலது கையில் முறிவு ஏற்பட்ட அவருக்கு அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.