தூத்துக்குடியில் இருந்து சிறிய ரக கப்பலில் மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, நடுக்கடலில் வைத்து மத்திய வருவாய் குற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி – மாலத்தீவு இடையே தோணி என்றழைக்கப்படும் சிறிய ரக கப்பல் மூலம் கட்டுமானப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி கடந்த 4-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்ற ஒரு சிறிய ரக கப்பலில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடலோர காவல்படையின் உதவியுடன் அந்த கப்பலை நடுக்கடலில் வழிமறித்த அதிகாரிகள், கப்பலை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர்.
சோதனையில் 30 கிலோ எடையிலான ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 இந்தோனேஷியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.