11 மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்திய ராணுவத்தில் இணைந்த இளம் லெப்டினன்ட் அதிகாரிகளின் பதவப் பிரமாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகளின் பதவியேற்பு அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முப்படை பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்ற புதிய லெப்டினன்ட் அதிகாரிகள் 169 பேர் பதவியேற்றுக் கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற கம்பீர அணிவகுப்பை அடுத்து பெற்றோர்கள் முன்னிலையில் அவர்கள் கைகளாலேயே தோள்பட்டையில் அணிந்துள்ள பதவிக்கான முத்திரையை பதித்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து, முப்படை பிரிவு தலைமை அதிகாரி முன்னிலையில் லெப்டினன்ட் அதிகாரிகள் பதவிப் பிரமாணத்திற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அதன் பின் தேசிய கொடிக்கு சல்யூட் அடித்தவாறு அனைவரும் லெப்டினன்ட் அதிகாரிகளாக அணிவகுத்துச் சென்றனர்.