சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கத்துடன் பிரபல கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான தங்கத்தை ரன்யா ராவ் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கத்தை இந்தியர்கள் கொண்டு வர முடியும்? அதற்கான விதிமுறைகள் என்ன ? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தங்கம் என்றாலே இந்தியர்களுக்கு ஒரு தனி ஆசை உண்டு. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தங்கம் ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் இந்தியர்களால் கருதப்படுகிறது.
இந்தியர்களின் வாழ்வில் தங்கத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது. ஆண்டுக்கு 800 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில், 33 சதவீத தங்கம் வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகளில், தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அந்நாடுகளில் விலை குறைவாக உள்ளது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்கு தங்கத்தின் மீதான வரி இருக்கிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை மிக அதிகமாக உள்ளது.
உதாரணமாக, மார்ச் மாதம் 5 ஆம் தேதியன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 கிராமுடைய 24 காரட் தங்கத்தின் விலை 83,670 ரூபாயாக இருந்தது. அதே நாளில் இந்தியாவில் தங்கத்தின் விலை 87,980 ரூபாயாக இருந்தது.
குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்க வேண்டும் என்ற பேராசை கடத்தலுக்கு வழி வகுக்கிறது. இதன் காரணமாகவே வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுகிறது. குறிப்பாக துபாயில் இருந்து ரகசியமாக தங்கம் கொண்டு வரப்பட்டு, பிடிபட்ட செய்திகள் அடிக்கடி வருகிறது.
இந்தியாவுக்கு கடத்தப்படும் மொத்த தங்கத்தில், 10 சதவிகிதம் மட்டுமே பிடிபடுவதாக DRI டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 833 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டில் சுமார் 4,869.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களே தங்கக் கடத்தலில் முன்னணியில் உள்ளன. சுமார் 60 சதவீத தங்கம் கடத்தல் வழக்குகள் இம்மாநிலங்களில் தான் பதிவு செய்யப்படுகின்றன.
15 சதவீதமாக இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக மத்தியஅரசு குறைத்தது. அதன்பிறகு தங்கம் கடத்தல் மிகவும் குறைந்துள்ளது என்று தங்கக் கடத்தல் தொடர்பாக Central Board of Indirect Taxes and Customs (CBIC ) தெரிவித்துள்ளது
இந்திய சட்டத்தின் படி, வெளிநாட்டில் இருந்து வரும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் கொண்டு வர முடியாது. ஒருவேளை அதிகமான தங்கத்தை எடுத்து வந்தால், அது குறித்த விவரங்களை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ரசீதையும் வைத்திருக்க வேண்டும். இதை செய்ய தவறினால் அது கடத்தலின் கீழ் வந்துவிடும்.
வெளிநாட்டில் இருந்து ஒரு ஆண் 20 கிராமும், ஒரு பெண் 40 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். அதற்கு எந்தவித சுங்க வரி கிடையாது.மேலும் ,15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 40 கிராம் தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உறவுமுறை குறித்த சான்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.
தங்கம் கொண்டு வருவதற்கான கட்டணத்தையும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) நிர்ணயித்துள்ளது. இதில், உரிய கட்டணம் செலுத்தி எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் கொண்டு வர முடியுமா? என்றால் அதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் படி, இந்தியர்கள், தங்க நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் என அனைத்து வகையான தங்கத்தையும் கொண்டு வரலாம்.
ஒவ்வொரு முறை தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போதும் தங்கம் கடத்தலும் அதிகரிக்கிறது. இதனால் தங்கம் இறக்குமதிக்கும் தங்கக் கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்றும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும், தங்கக் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு AI தொழிநுட்பத்தையும் மத்திய அரசு பயன்படுத்திவருகிறது