கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த எலிசபெத் ராணி என்பவர் கடந்த 26ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 27ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நள்ளிரவு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது எலிசபெத் ராணி வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்த எலிசபெத் ராணியை, அவரது தாய் அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்டுள்ளார்.
பின்னர், எலிசபெத் ராணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.