கோயில் வளாகத்துக்கு வெளியே சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்திற்கு வெளியே, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் சடங்குகள் செய்ய புரோகிதர்களை அனுமதிப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கோயில் வளாகத்திற்கு வெளியே பக்தர்கள், புரோகிதர்களை வைத்து பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்யும் போது அதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது எனக் கூறினார்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பூஜை, சடங்குகளை நடத்துகிறார்கள் என்ற அறிவிப்பு பலகையை அறநிலையத்துறை கோயில்களில் வைக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.