மாமன்னன் ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திருச்சி உய்யகொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரியின் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே உள்ள மாயனூரில் கால்வாயை வெட்டி அதன் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களுக்கு பாசன வசதியை மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தொழில்நுட்பத்தின் மூலம் வெட்டப்பட்ட இந்த உய்யகொண்டான் கால்வாய், இன்றளவும் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது.
ராஜராஜ சோழனின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக திகழும் இந்த உய்யகொண்டான் கால்வாய், பாசன வசதியோடு மட்டுமின்றி, ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளையும் நிரப்பும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் உய்யகொண்டான் கால்வாயின் மூலம் பாசன வசதியை பெறுகின்றன. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்த இக்கால்வாயில் தற்போது கழிவுநீர் கலந்து நீரின் தன்மை மோசமடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாநகரப்பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களின் கழிவுநீர் நேரடியாக உய்யக்கொண்டான் கால்வாயில் திறந்து விடப்படுவதால், கால்வாய் முழுவதுமே மோசமான நிலையில் இருப்பதால் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைத் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கியும் வந்த உய்யக் கொண்டான் கால்வாயை உடனடியாக சீரமைத்து, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.