தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கோபி – ஜாகிரா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ள சூழலில், ஜாகிரா மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்த அவர், பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது ஜாகிராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தாயும் சிசுவும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அலட்சியத்துடன் செயல்பட்ட 3 செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.