திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுகவைச் சேர்ந்த வெளியூர் வியாபாரியை விவசாயிகள் விரட்டியடித்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சொக்கம்பட்டி, ஏரம்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.
தற்போது பருத்தி வெடிக்க தொடங்கி அமோக விளைச்சலை கண்டுள்ள நிலையில், திருச்சுழியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவர் பருத்திகளை விற்பனை செய்ய உள்ளூர் வியாபாரிகளை அணுகியுள்ளார். ஒரு குவிண்டால் 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கு தருவதாக உள்ளூர் வியாபாரி கூறிய நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த வியாபாரியும் திமுகவை சேர்ந்தவருமான சத்யராஜ் என்பவர் ஒரு குவிண்டால் பருத்திக்கு 7 ஆயிரத்து 300 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தபோது எலக்ட்ரானிக் மிஷினில் எடைபோட்ட சத்யராஜ் 3 குவிண்டால் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி அடைக்கலம் வியாபாரி சத்யராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த மற்ற விவசாயிகளும் சத்யராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் தனது கூலியாட்களை அழைத்து கொண்டு வியாபாரி சத்யராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். திருச்சுழி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சத்யராஜ் போன்ற வெளியூர் பருத்தி வியாபாரிகளிடம் எடை சம்மந்தமாக மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளானர்.
மேலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.