சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இரவு நேரத்தில் சென்னைக்கு திரும்புவோர், போதிய பேருந்துகள் இல்லாத பட்சத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அப்படியான பயணம் சில நேரங்களில் மிகுந்த ஆபத்துமிக்க பயணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறவும் அப்பயணங்கள் பெரும் காரணங்களாக உள்ளன.
இரவு நேரங்களில் ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கத்தில் க்யூ ஆர் கோடு பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகள், அசாதாரண சூழலை உணர்ந்தால், தங்களுடைய செல்போனில் அந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து SOS பட்டனை அழுத்தினால், குறிப்பிட்ட வாகனத்தின் அனைத்து விவரங்களும் காவல்துறையின் கவனத்திற்கு சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கவே அச்சப்படும் சூழலில், சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் க்யூ ஆர் கோடு திட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பொதுப்போக்குவரத்து என அனைத்துவிதமான இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த க்யூ ஆர் கோடு திட்டம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.