காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமலே கண்டுபிடிக்கும் வகையில் புதிய வகை டி சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
உடலில் வெப்பமோ, குளிர்ச்சியோ அதிகரித்தால் அதனை வெளிப்படுத்தும் வகையிலான டீசர்ட் ஒன்றை தயாரித்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த சொக்கலிங்கம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் இவர், கட்டிங் மாஸ்டராக பின்னலாடை துறையில் நுழைந்து டெக்னிக்கல் மேனேஜர் வரை உயர்ந்திருக்கிறார்.
பின்னலாடை துறையில் தனது 44 ஆண்டுகள் அனுபவத்தை பயன்படுத்தி ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் வாயிலாக வெப்பத்தை உணர்த்தும் இன்க்-ஐ கண்டுபிடித்து அதற்கான அனுமதியை பெறவும் விண்ணப்பித்திருக்கிறார்.
உலகளாவிய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை ஆடை கண்டுபிடிப்புகளுக்கு பெருமளவில் வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் வாயிலாக பூ மற்றும் வெங்காய சருகுகள் உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டு இந்த இன்க் – ஐ சொக்கலிங்கம் தயாரித்துள்ளார்.
கொரனா காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலை கண்டுபிடிக்க ஏற்பட்ட சிரமமே இந்த புதிய முயற்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
99 டிகிரி வெப்பநிலைக்கு மேலாக உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது டீசர்ட்டில் ஏற்கனவே உள்ள வண்ணம் தானாகவே மாறும் வகையிலும், வெப்பநிலை சராசரியான நிலைக்கு வரும் போது மீண்டும் ஏற்கனவே இருந்த வண்ணத்திற்கு மாறும் வகையில் இந்த டீசர்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவிகளோடு எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்தாலும் கூட மனித உடலில் ஏற்படும் மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இன்க் டி சர்ட் மிகவும் அவசியமாக அமைந்துள்ளது.