சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று வழியை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், கண்ணாடி பாட்டில்களில் பால் பொருட்களை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக், பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா ஆகியோர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஆவின் தரப்பில், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் தள்ளிவைத்தது.