லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் பெற்றோருடன் மனு அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும், நக்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லண்டன் வாழ் இந்தியரான கவிராஜ் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த மார்ச் மாதம் தனியார் மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண் காயத்ரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் 50 சவரன் நகைகளும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனக்கூறிய கவிராஜ், திருமணமான 18-வது நாளே தன்னுடன் சண்டையிட்டு பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது கணவரை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கவிராஜின் பெற்றோர் அளித்த விளக்கத்தில், திருமணம் முடிந்த பிறகு காயத்ரி தனது தந்தைக்கு அதிகளவு கடன் இருப்பதாக கூறி 50 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே லண்டன் வந்து கவிராஜனுடன் சேர்ந்து வாழ முடியும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மகனுக்கு பிடித்திருந்த காரணத்தால் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ள அவர்கள், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.