நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்த வானிலை ஆய்வு மையம், அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், காலை முதல் நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல், விட்டு விட்டு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, புகார் அளிப்பதற்கான அவசர தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல் , கீழ்வேளூர், எட்டுக்குடி உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. தொடர்ச்சியாக மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது .