எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எந்திரன் திரைப்பட கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை எழுப்பூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆரூர் தமிழ்நாடனின் ஜூகிபா நாவலை தழுவி திரைப்படம் எடுக்கப்பட்டிருந்ததை உறுதி செய்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் இயக்குநர் சங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியிருப்பதாக குற்றம் சாட்டி, அவரின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி இயக்குநர் சங்கர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் சங்கர் தரப்பில் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை என வாதிடப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதால்தான், இயக்குநர் சங்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இயக்குநர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால் தடை விதித்தனர்.
மேலும், இயக்குநர் சங்கரின் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.