தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமி கோயிலில் கருவறை அருகே நிலவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கோயிலின் கருவறை அருகே பள்ளம் தோண்டப்பட்ட போது 8 அடி ஆழமும், 15 அடி நீளமும் கொண்ட நிலவறை இருப்பது தெரியவந்தது.
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில் என கூறப்படும் நிலையில் நிலவறை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் நிலவறை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய தொல்லியல் துறை பேராசிரியர் ரமேஷ் நிலவறையில் மணல் மட்டுமே உள்ளது எனவும் ஆய்வு நடத்திய பின்னர் தான் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்பது தெரியவரும் எனவும் தெரிவித்தார்.