சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 482 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன எனவும் அதில் கணிசமானவை தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனம் சார்பில் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.
சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்காக நிலங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கிவிட்டன எனவும் மொத்தமாக அமைய உள்ள சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியில் தற்போது உள்ள 89 பார்க்கிங் இடங்களில் தான், சார்ஜிங் நிலையங்கள் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ.,க்கு தூரத்திற்கு ஒரு சார்ஜிங் நிலையமும், மாநகரங்களில் ஒவ்வொரு, 3 கி.மீ.க்கு தூரத்திற்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது
நிலத்தை அடையாளம் காண, டி.என்.ஜி.இ.சி உடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் போதுமான எண்ணிக்கையிலான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக டி.என்.ஜி.இ.சி இயக்குனர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.