நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை என வெளியான தகவலுக்கு அவரது கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார்.
படையப்பா, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை செளந்தர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை எனக்கூறி ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், செளந்தர்யாவின் 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை நடிகர் மோகன் பாபு கேட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் செளந்தர்யா தர மறுத்த நிலையில், விபத்தில் அவர் உயிரிழந்த பிறகு சட்டவிரோதமாக மாளிகையை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே செளந்தர்யா மரணத்தில் சதித்திட்டம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சிட்டிமல்லு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது புகார் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு செளந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது மனைவியிடம் இருந்து நடிகர் மோகன் பாபு எந்த சொத்தும் வாங்கவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்புவதை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளளார்.