திருவண்ணாமலையில் மாசி மக தினமான நேற்று சிவபெருமானை மகனாக பாவித்த வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
குழந்தைகள் இல்லாததால் சிவ பெருமானை மகனாக பாவித்த திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா, தைப்பூச தினத்தன்று போரில் வீரமரணம் அடைந்தார். அதன் 30-ம் நாளான மாசி மக தினத்தன்று வல்லாள மகாராஜாவை தந்தையாக கருதி, அண்ணாமலையார் அவருக்கு திதி கொடுத்ததாகவும் ஐதீகம் உள்ளது.
திருவண்ணாமலையை அருகே பள்ளிகொண்டாப்பட்டில் உள்ள துரிஞ்சலாற்றில், கௌதம நதிக்கரையில் இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஐதீகம் சுமார் 200 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாசி மக தினமான நேற்று தனது தந்தையான வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் தீர்த்தவாரி நடத்தி திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் மேற்கொண்டதுடன், கௌதம நதிக்கரையில் முங்கி எழுந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.