அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மனு மீது 21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அரசு தரப்பு கால அவகாசம் கேட்பதாக வாதிட்டார்.
மேலும், வழக்குகளை இணைத்து விசாரித்தால் விசாரணை எப்போது முடியும் என நினைத்துக்கூட பார்க்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீது 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.