பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 2010ம் ஆண்டு ரூபாய் குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் திமுக முற்றிலும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள அவர்,
ரூபாய் சின்னம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக திகழ்வதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
UPI-ஐ பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதிமொழி எடுப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,
மாநில பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானது என கூறியுள்ளார்.
இது பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலையை குறிப்பதாகவும்,
முற்றிலும் தவிர்க்க வேண்டிய மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இது உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.