சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரிய உடைகளை அணிந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய நிகழ்வை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு மலையாள மாதமான மகரம் – கும்பம் மாதங்களில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
கேரளாவிற்கு செல்ல முடியாத மக்களும் திருவிழாவை கொண்டாடும் வகையில் சத்ஸ்ங்கமம் அமைப்பு சார்பில் மீனம்பாக்கம் பின்னி மில் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்வு எந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறுமோ அதில் சிறிதளவுக்கும் குறையில்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
சென்னையில் இருந்தபடியே திருவனந்தபுரத்தில் இருக்கும் பகவதி அம்மனை வழிபடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இதே சீரோடும் சிறப்போடும் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடம் எழுந்துள்ளது.