பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பங்குனி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறவிருக்கிறது.
மேலும், வரும் 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு வந்த பின், வழக்கமான மேம்பாலம் வழியாக செல்லாமல், கொடிமரத்தில் இருந்து நேரடியாக கோயில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்ல திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய வசதிகளை செய்துள்ளது.