கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டதால் சாலை அமைக்கும் பணிகளை தொழில் வர்த்தக சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அதனை சீரமைத்து தரக்கோரி தொழில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் சாலை மீது புதிதாக ஊற்றப்பட்ட தார் கலவை இரண்டே நாட்களில் பெயர்ந்து வந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தொழில் வர்த்தக சங்கத்தினர் சாலை பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்கப்படும் இடங்களில் கனரக வாகனங்களை தற்காலிகமாக அனுமதிக்ககூடாது எனவும், சேதமடைந்த சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்றும் தொழில் வர்த்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.