தமிழக தேர்வகளுக்கு பிற மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதில் எந்த ஒரு பாகுபாடும் காட்டப்படவில்லை என ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.
ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் ரயில் இன்ஜின் உதவி துணை ஓட்டுநர் தேர்விற்கான இரண்டாம் கட்ட தேர்வு வரும் மார்ச் 19 தேதி நடைபெறவுள்ளது.
கணினி மூலம் நடத்தப்பட்டும் இந்த 2-ம் கட்ட தேர்வுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தகுதி பெற்றனர்.
493 காலிபணியிடங்களுக்கு ஏராளமானோர் தகுதி பெற்ற நிலையில் பெரும்பாலானோருக்கு தெலுங்கானா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் குழப்பமடைந்த தேர்வர்கள் தமிழகத்திலேயே தங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கக் கோரி கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த ரயில்வே தேர்வு வாரியம், முதல் 3 சுற்றுகளில் வெவ்வேறு வினாத்தாள் அளிக்கப்படும் என்பதால் அது சொந்த மாநிலங்களிலே நடத்தப்பட்டது எனவும்,
இரண்டாம் கட்ட தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது என்பதால் இம்முறை கையாளப்பட்டதாகவும், இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறை தான் எனவும் தேர்வு ஆணையம் விளக்கமளித்தது.
மேலும், பிற மாநிலங்களில் தேர்வு மையம் அளிக்கப்பட்டதில் எந்த ஒரு பாகுபாடும் காட்டப்படவில்லை என தெரிவித்துள்ள ரயில்வே தேர்வு வாரியம், பட்டியல் சமூக மாணவர்களுக்கு இலவச ரயில் பயணமும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.