திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் உயிரிழப்புக்குக் கோயில் நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்ற ஓம் குமார் என்பவர் வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட ஓம் குமாரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசரக்கால வழி இல்லாததால், காலதாமதம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளனர்.
அதில், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றும், குறிப்பாக மருத்துவ தேவைக்கு எந்த வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். காசு கொடுத்தால் சிறப்புத் தரிசனம் எனக்கூறி பக்தர்களிடம் பல்வேறு தரப்பினர் பணப்பறிப்பில் ஈடுபடுவதாகவும், காசு மட்டுமே குறிக்கோளாகச் செயல்படுவோர் மீது கோயில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த ஓம் குமாரின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.