மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தச்சுப் பணி இருப்பதாகக் கூறி 5 பேர் முகவர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் 3 பேர் மரம் வெட்டும் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், முன் அனுபவம் இல்லாத நபர்கள் மரங்களை வெட்டும்போது திடீரென ஒருமரம் சாய்ந்து 2 தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நள்ளிரவு தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களைச் சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.