டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை திசைதிருப்பவே பட்ஜெட்டில் ரூபாய் குறியீட்டை மாற்றி திமுக அரசு நாடகமாடியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஆர்ப்பாட்டத்துக்கு வரும் வழியில் சென்னையை அடுத்த அக்கரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக பனையூரில் தனது வீட்டின் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை திசைதிருப்பவே பட்ஜெட்டில் ரூபாய் குறியீட்டை மாற்றி திமுக அரசு நாடகமாடியதாகக் குற்றம்சாட்டினார்.
பாஜகவினர் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் திமுக அமைச்சரவையில் ஊழல் பேர்வழி ஒரு அமைச்சராக இருக்கிறார் என குற்றம்சாட்டினார்.
டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் கவிதா, கெஜ்ரிவாலைப் போல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
டாஸ்மாக் விவகாரத்தில் நாங்கள் பேசினால் உண்மை வெளிவரும் என்பதால் கைது செய்கின்றனர் என்றும் டெல்லியை விட மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என அண்ணாமலை கூறினார்.