ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக கொண்டுவந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாகச் செயல்படாமல் அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பெரும்பாலான நேரங்களில் பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்றும், ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே பேரவை நிகழ்வை நடத்தி வருகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் பிரச்னைகளை பேசவிடாமல் அதிமுக உறுப்பினர்களை அமர கூறுவதுதான் ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பிய அவர், கருப்பு சட்டை அணிந்து வந்ததால் அதிமுகவினரை காண்பிக்காமல் பேரவைத் தலைவர் இருட்டடிப்பு செய்ததாகக் கூறினார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவைத் தலைவரின் கடமை எனக்கூறிய இபிஎஸ், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப் பேரவைத் தலைவர் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறை என்ற தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.