சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கொல்லங்குடி பகுதியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வெட்டுடையார் காளியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மங்கள வாத்தியங்களுடன், ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.